அமராவதி :2014 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது தலைநகரில் இருந்து புறநகர் பகுதிகளை இணைக்கும் இன்னர் ரிங் ரோடு சாலை அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ அல்ல ராம கிருஷ்ணா ரெட்டி புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து ஆந்திர சிஐடி போலீசார் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் மற்றும் சில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போக சந்திரபாபு நாயுடு மீது மணல் கொள்ளை மற்றும் மதுபான ஊழல் உள்ளிட்ட இரண்டு வழக்குகளையும் ஆந்திர சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி மூன்று வெவ்வேறு மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி டி. மல்லிகார்ஜூன ராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.