விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர சிஐடி காவல் துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, விஜயவாடா சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் மனுவையும் நிராகரித்த நீதிமன்றம், அவரது வீட்டுக் காவல் மனுவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல் துறையினர் இரண்டு நாள் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் இன்று (செப்.22) அனுமதி அளித்துள்ளது. சிஐடி காவல் துறையினர் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஓய் என் விவேகானந்தா கூறும்போது, செப்டம்பர் 23 மற்றும் 24 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் சந்திரபாபு நாயுடுவை காவல் துறை காவலில் வைக்க ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாட்களும் சந்திரபாபு நாயுடுவை சிஜடி காவல் துறையினர் காலை 9 மணிக்கு தனது பாதுகாப்பில் எடுத்து விசாரணை செய்து, மீண்டும் மாலை 5 மணிக்கு சிறைக் காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், விசாரணையின்போது தவறாக நடத்தப்படவோ, துன்புறுத்தல் மற்றும் மூன்றாம் நிலை முறைகள் உட்படுத்தப்படவோக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.