ஹைதராபாத்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றைய தினம் (நவம் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அனைத்து இந்தியர்களின் இதயத்தை உடைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து மிகவும் சோகமாக வெளியேறிய இந்திய அணியின் முன்னால் கேப்டன் விராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியை கட்டியணைத்து ஆறுதல் கூறும் புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இது ஒருபக்கம் இருக்க, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமாக இந்திய அணி தோல்வி அடைந்ததற்குத் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது 'X' பக்கத்தில், "அன்புள்ள இந்திய அணியினரே, உலகக் கோப்பை போட்டியில் உங்களின் திறமையும் உறுதியும் அபாரமானது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்று மட்டும் அல்ல எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்" என்று ஊக்கமளிக்கும் வார்த்தைகளோடு பாராட்டி தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
இதே போல நடிகர் ஷாருக்கான் போட்டியில் இந்திய அணியின் செயல்திறனைப் பாராட்டி அவர்களின் உற்சாகமான முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, "விளையாட்டில் பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் நிரப்பும் நமது இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவத்திற்காக நான் இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் முழு தேசத்திற்கும் மகத்தான பெருமைக்குரிய ஆதாரமாக இருக்கிறார்கள்" என்ற செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி எதிர்பாராத வகையில் தோல்வியடைந்ததை அடுத்து, ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் இந்திய அணியினருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகக் கோப்பை தோல்விக்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன?