மாஸ்கோ: ரஷ்யாவின் தாகெஸ்தான் மாகாணத்தில் உள்ள மகச்சலா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளே நுழைந்து இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து விமானம் மூலம் வந்த யூதர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி முற்றுகையிட்டதாக ரஷ்யச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய கேரியர் ரெட் விங்ஸ்க்கு சொந்தமான விமானத்தை நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி வளைத்து உள்ளனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தை அதிகாரிகள் மூடினர். பின் இந்த பகுதி முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தில், 20 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 2 நபர் கவலைக்கிடமாக இருப்பதாக தாகெஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சிலர், பாலஸ்தீனக் கொடியசைப்பதையும், சிலர் காவல்துறையின் வாகனத்தினை கவிழ்க்க முயல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இஸ்ரேல் மக்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் அவர்களின் பாஸ்போர்ட்டுகளையும் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ”ரஷ்யச் சட்ட அமலாக்க அதிகாரிகள் இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கலவரக்காரர்களுக்கு எதிராக அதிகாரிகள் செயல்பட வேண்டும்." என அறிக்கையில் கூறப்பட்டது.
மேலும், இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்ய இஸ்ரேலிய தூதர் ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, தாகெஸ்தான் அமைந்துள்ள ரஷ்யாவின் வடக்கு காகசியன் ஃபெடரல் மாவட்ட நிர்வாகம் விமான நிலையத்தைத் தாக்கியவர்களை சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றார்.
இதுகுறித்து, தாகெஸ்தான் மாகாணம் கூறியுள்ளதாவது, "பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. குடியரசில் உள்ள மக்கள் புரிந்துணர்வோடு செயல்பட வேண்டும் எனவும், காசாவில் நடைபெறும் போரைக் கட்டுப்படுத்தச் சர்வதேச அமைப்புகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. குடியரசில் உள்ளவர்கள் ஆத்திரமூட்டலுக்கு அடி பணிய வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, ரஷ்யாவின் சிவிலியன் ஏவியேஷன் ஏஜென்சி, ரோசாவியாட்சியா விமானநிலையம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால் நவம்பர் 6 வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:21வது நாளாக தொடரும் போர்; காசாவில் இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழப்பு!