டெல்லி: ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்தும் இன்று(மார்ச்.26) காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் அருகே நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜ்காட்டில் நடந்த இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான ஜெகதீஷ் டைட்லர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதீஷ் டைட்லர் மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். டெல்லி காங்கிரஸில் முக்கியத் தலைவராகவும் இருந்த டைட்லர், கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, சீக்கியர்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர். இது தொடர்பாக விசாரணை அறிக்கையில் டைட்லர் பெயர் இடம்பெற்றது. இதையடுத்து டைட்லர் காங்கிரஸிலிருந்து விலகினார்.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெகதீஷ் டைட்லர் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனை பாஜக கடுமையாக விமர்சித்தது. பின்னர் கடந்த மாதம் ஜெகதீஷ் டைட்லர் மீண்டும் காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது, சீக்கியர்களுக்கு எதிராக கொலை வெறித் தாக்குதல் நடத்திய நபருக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரக்காரர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஜெகதீஷ் டைட்லர் பங்கேற்றது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.