காட்மாண்டு:நேபாளம், காட்மாண்டு பகுதியில் இன்று (நவ. 5) காலை 04:38:20 (IST) மணிக்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 3 ஆம் தேதி நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம், பல்வேறு இடங்களில் கடுமையான சேத்தையும், விளைவுகளையும் ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு மலைப் பிரதேச மாவட்டங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரையில் 157 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்ள நேபாள ராணுவம், நேபாளி சென்டினல் மற்றும் ஆயுதப்படை போலீஸ் போன்ற படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த மீட்பு பணியில் சுகாதாரப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேபாளத்தில் நேற்றும் ரிக்டர் அளவில் 4.2 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜஜர்கோட் மாவட்டத்தில் பிற்பகல் 3.40 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. மேலும், பல மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த பாதிக்கப்பட்டப் பகுதிகளை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, “ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். பல வீடுகள் கட்டடங்கள் என சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கத்தால் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மேலும், மீட்பு பணியில் இராணுவம் போன்ற படைகளும் இறங்கி மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி நேபாளத்திற்கு தேவையான உதவிகளையும், ஆதரவுகளையும் இந்தியா வழங்கும் என அறிவித்தார். மேலும், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கான எச்சரிக்கை அவசரத் தொடர்பு எண்: +977-9851316807 நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் "X" தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:முகேஷ் அம்பானிக்கு இமெயிலில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!