தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்ற இளைஞர் பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். தன்னைக் காதலிக்கும்படி சிறுமியை ஷாருக் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமி மறுப்புத்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 23ஆம் தேதி, காலையில் சிறுமி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக அவர் மீது பெட்ரோலை ஊற்றிய ஷாருக், தீ வைத்து கொளுத்தியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறுமி கடந்த 27ஆம் தேதி இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் இறப்பு அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.