புதுடெல்லி:கேரள மாநில காங்கிரஸின் சோஷியல் மீடியா ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், அனில் ஆண்டனி. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் ஆவார். குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸில் இருந்து அனில் ஆண்டனி விலகினார்.
பிபிசி-யின் ஆவணப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த அனில் ஆண்டனி, இந்திய நிறுவனங்கள் மீது பிரிட்டிஷ் ஊடகம் வைக்கும் கருத்து, நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த கருத்துகளைத் தெரிவித்த பின், தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகவும் அனில் ஆண்டனி கூறினார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று (ஏப்ரல் 6) மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளிதரனை சந்தித்த அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கட்சியின் நிர்வாகிகள் தருண் சவுக், அனில் பாலுனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் ஆண்டனி, "ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு உழைப்பது தான் நமது கடமை என காங்கிரஸ் தலைவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், நான் நாட்டு மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவான தொலைநோக்கு பார்வை உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்றார்.