ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள எலுரு பகுதி மக்கள் கடந்த 5ஆம் தேதி முதல் வாந்தி, தலைவலி, மயக்கம், வலிப்பு, மறதி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சிலர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பினும், தொடர்ந்து மக்கள் இந்தப் புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதுவரை இந்த நோயால் 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நோய் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்தியாவின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடியுள்ளார்.
புதிய நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களியிடையே எந்தவிதமான பொது தொடர்பு இல்லை. மேலும், அவர்களுக்கு கரோனா, டெங்கு, சிக்கன்குனியா, ஹெர்பெஸ் போன்ற பிற வைரஸ் நோய்களுக்கான பரிசோதனையிலும் 'நெகட்டிவ்' தான் வந்துள்ளது.
இதனால், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் காரியம், நிக்கல் அதிகளவு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நச்சு காரணமாகவே அவர்களுக்கு இதுபோன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில், அசுத்தமான நீரின் காரணமாக நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், நகராட்சி நீர் விநியோகத்தைப் பயன்படுத்தாத மக்களும் நோய்வாய்ப்பட்டிருப்பதை முதலமைச்சர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
மேலும் நீர் மாதிரிகளின் ஆரம்ப சோதனைகளில் எந்தவிதமான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை எனவும் தெளிவாக தெரிகிறது.
இந்தப் புதிய நோயின் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், அவரின் உடற்கூராய்வில் இறப்பு காரணம் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கரோனா ஆந்திராவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.