குண்டூர்: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஹைதராபாத்தில் நர்சிங் படித்து வருகிறார். இவர் ஆன்லைன் வகுப்புகளுக்காக தனது தந்தையின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அப்போது, உடைகள் உள்ளிட்டவற்றை வாங்க, தந்தைக்கு தெரியாமலேயே அவரது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 80,000 ரூபாயை செலவு செய்துள்ளார். தந்தையின் செல்போனில் இருந்த ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு தான் எடுத்த பணத்தை தந்தையின் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும் என நினைத்துள்ளார். பணத்தை ஏற்பாடு செய்யும் முயற்சியில் இருந்த மாணவியிடம், அவரது நண்பர்கள் சிறுநீரகத்தை விற்றுப் பணம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து சிறுமி சிறுநீரகத்தை விற்பனை செய்ய சமூக வலைதளங்களில் தேடியுள்ளார். ஒரு இணையதளத்தில் சிறுநீரகத்திற்கு 7 கோடி ரூபாய் வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்து பிரவீன்ராஜ் என்ற மருத்துவரைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்த மருத்துவர், முதற்கட்டமாக மூன்றரை கோடி ரூபாயைத் தருவதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீதிப்பணத்தை தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து அவர் பரிந்துரை செய்த மருத்துவப் பரிசோதனைகளையும் செய்துள்ளார். பின்னர் அந்த மருத்துவர், கூறியபடி மூன்றரை கோடி ரூபாயை மாணவியின் தந்தையுடைய வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக ஸ்கிரீன் ஷாட் அனுப்பியுள்ளார். ஆனால், தந்தையின் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை.
இதுகுறித்து மருத்துவரிடம் கேட்டபோது, டாலரை ரூபாயாக மாற்ற 15,000 ரூபாய் செலுத்தும்படி மாணவியிடம் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாணவியும் செலுத்தியுள்ளார். இதுபோன்ற பல்வேறு காரணங்களைக் கூறி, கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை 16 லட்சம் ரூபாயை மாணவியிடமிருந்து ஏமாற்றி வாங்கியுள்ளார்.