ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி அவரது வீட்டின் கழிவறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகு பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் கேசிஆரின் உடல் நலம் குறித்து அவரது மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ், கேசிஆருக்கு ஓய்வு தேவைப்படுவதாகத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், டிசம்பர் மாதம் 10ஆம் தேதி தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கேசிஆரிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் மருத்துவமனையில் இருந்த கேடிஆரிடம், கேசிஆரில் உடல் நிலை குறித்தும் மருத்துவர்களின் அறிக்கை குறித்தும் கேட்டறிந்ததாகக் கூறப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேசிஆர் தற்போது மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவரது இல்லத்தில் ஓய்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, கேசிஆரை சந்தித்து நலம் விசாரித்து உள்ளார்.
சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் வந்த ஜெகன் மோகன் ரெட்டி, அங்கிருந்து கார் மூலம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கேசிஆரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு ஓய்வில் இருந்து உடல்நலம் தேறிவரும் கேசிஆரை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்குப் பூங்கொத்து கொடுத்து விரைவில் குணம் பெற வாழ்த்தினார். மேலும் கேசிஆருக்கு, ஒய்எஸ்ஆர் ஆந்திரப் பிரதேச கட்சியின் சால்வையையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கேசிஆரின் வீட்டிற்கு வந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை, கேசிஆரின் மகன் கேடிஆர் வாசலில் நின்று வரவேற்றார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் சென்ற ஆந்திர மாநில முதலமைச்சரின் தங்கையும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவருமான ஒய்எஸ் ஷர்மிளா தன்னையும், கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்துக் கொண்டார். ஒய்எஸ்ஆர் ஷர்மிளா காங்கிரசில் இணைந்தது தெலங்கானா அரசியலில் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் கேசிஆரைச் சந்தித்துள்ளார்.
கேசிஆரின் உடல் நலம் குறித்து விசாரிக்க நடந்த இந்த சந்திப்பு அரசியல் மாண்பைக் காட்டுவதாக இருந்தாலும், இந்த திடீர் சந்திப்பிற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என அரசியல் கூர் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலம் இந்த ஆண்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள உள்ளது. மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகின்றது. இந்த சூழலில் இவர்களின் சந்திப்பு தேசிய அளவில் ஏதேனும் புதிய கூட்டணியை உருவாக்கலாம் எனவும் அரசியல் கூர் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீரென காங்கிரஸில் ஐக்கியமான ஒய்.எஸ்.ஷர்மிளா.. தெலங்கனா அரசியலில் நடப்பது என்ன?