மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "கோயம்புத்தூரைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர், ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள பசியாற வேண்டும் என்பதற்காக விறகு அடுப்பு மூலம் ’ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி’ என்று மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார். அவரது தொழிலில் ‘முதலீடு’ செய்ய விரும்புகிறேன். விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டால் ’இட்லி அம்மா’ நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கினார். மேலும் விறகு அடுப்பில் சமைத்து வந்த இட்லி அம்மாவுக்கு கோயமுத்தூர் பாரத் கேஸ் நிறுவனம் இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது.
அதன்பிறகும் தொடர்ந்து மலிவான விலையில் கமலாத்தாள் உணவு வழங்கி வந்த நிலையில், அவருக்கு சொந்தமான இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இச்சேவையை வழங்க வேண்டுமென அவருக்கு ஆசை இருந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆசையையும் ஆனந்த் மஹிந்திரா தற்போது நிறைவேற்றியுள்ளார்.