ஹைதராபாத்: பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது ஏற்பட்ட திகில் அனுபவத்தை சுவாரஸ்யமாக காணொலி காட்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்தப் பயணம் அழகிய தேயிலைத் தோட்டத்தின் நடுவே தென்றல் குளிர் காற்று வீசும் சாலை வழியாக அமைந்தது. இந்தப் பயணத்தை அனுபவித்து கொண்டிருந்த போது, குறுக்கே மூன்று கரடிகள் நின்றன. இந்தக் கரடிகளை பார்த்ததும் பைக்கை ஓட்டியவர் கொஞ்சம் தூரத்தில் வண்டியை நிறுத்தினார்.
இந்நிலையில், பைக்கை பார்த்ததும் ஒரு கரடி அருகிலிருந்த சுவரின் மீது ஏறியது. மற்றொரு கரடி முறைத்தது. இதற்கிடையில் ஒரு கரடி பைக்கை நோக்கி தாக்கும் வகையில் வேகமாக ஓடிவந்தது. இதனை, “அமிலம் சுரக்கும் தருணம்” என்ற தலைப்பில் வர்ணித்து ஆனந்த் மகிந்திரா எழுதியுள்ளார்.
அதில், “உங்களுக்கும் அமிலம் சுரக்க வேண்டும் என்றால் காணொலியை கடைசிவரை பார்க்கவும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் காணொலி 13 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பைக்கும் தாமும் நலமுடன் இருப்பதாகவும் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டப் படிப்பு நிறுத்தம்!