கரோனா தொற்று பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து பொதுப்போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டது. பின்னர் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்த நிலையில், பொதுப்போக்குவரத்து மெல்ல மெல்ல அதன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த 11 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நிலையத்தில் நடைமேடை எண் இரண்டில் நின்றுகொண்டிருந்த புறநகர் ரயிலில் ஏறுவதற்கு முன்பாக இளைஞர் ஒருவர் ரயில் படியை தலை குனிந்து தொட்டு வணங்கியுள்ளார், இதனை அப்போது புகைப்படம் எடுத்த இளைஞர் ட்விட்டரில் பதிவிட்டதால் அப்புகைப்படம் வைரலானது.
நடுத்தரவாசிகளின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் ரயில் தங்களின் உணர்வு சம்மந்தப்பட்டது என்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.