ஹைதராபாத்: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் -135, பாஜக -66, மதச்சார்பற்ற ஜனதா தளம்-19, சுயேட்சைகள்-2, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்சா மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய மக்கள் மதவாத சக்தியை முற்றிலும் அகற்றிவிட்டனர் என பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்கள் மற்றும் தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால் அரசியல் நோக்கர்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கர்நாடக தேர்தல் முடிவை கவனமாக அணுக வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர். அதற்கான காரணம் 66 இடங்களில் மட்டும் வென்றிருந்தாலும் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் தான்.
வாக்கு சதவீதத்தில் மாஸ் காட்டிய பாஜக: இந்த தேர்தலின் சில புள்ளி விவரங்கள் பாஜகவுக்கு ஆறுதலையும், காங்கிரஸுக்கு சவாலையும் கொடுத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், தற்போதைய தேர்தல் நிலவரப்படி, காங்கிரஸ் 42.88 சதவீதம், பாஜக 36 சதவீதம், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) 13.29 சதவீதம், நோட்டா 0.69 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அதேநேரம், கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 104 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் 36.35 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், தோல்வி அடைந்த காங்கிரஸ் 80 இடங்கள் உடன் 38.14 சதவீத வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்கள் உடன் 18.3 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன. இதனைப் பார்க்கும்போது, முந்தைய சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியில் பாஜக மிகவும் சொற்ப வித்தியாசமே தென்படுகிறது.
அதேபோல், காங்கிரஸ் பெற்ற 4.74 சதவீத கூடுதல் வாக்குகள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படுகிறது. ஏனென்றால், பாஜகவின் வாக்கு வங்கியும், அதன் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற இடங்களும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவே தெரிகிறது. குறிப்பாக, கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மெட்ரோ நகரமான பெங்களூருவில் பாஜக தனது ஆதிக்கத்தை வலுவாக செலுத்துவது புலப்படுகிறது.