அமராவதி (ஆந்திரப்பிரதேசம்):ஆந்திரா மாநிலம் அமராவதியில் உள்ள அனந்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவாரவ் (79). விவசாயியான இவரின் மனைவி இறந்து விட்டார். இவரது மகனும், மகளும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவர் தற்போது அவரது சகோதரர்களின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அமராவதி முதல் அரசவல்லி வரையிலான பாதயாத்திரையில் மாதவராவ் பயணித்து வருகிறார். அங்கு இவருடன் பயணிக்கும் பலரையும் இவரது செயல்பாடுகள் ஈர்த்துள்ளன. ஏனென்றால் மதிய உணவின்போது மற்றவர்கள் சோறு, பருப்பு மற்றும் பச்சைப்பயிறு ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், மாதவராவ் நான்கு கேரட், நான்கு முருங்கைக்காய் மற்றும் இரண்டு எலுமிச்சை பழங்களை சாப்பிடுவதற்காக தயார்படுத்திக் கொண்டிருப்பார். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மாதவராவ் யோகா செய்து கொண்டிருப்பார்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே தூங்குகிறார். இதற்கு முன்னதாக அமராவதியில் இருந்து திருப்பதிக்கு 45 நாட்களில் சுமார் 1,400 கிலோமீட்டர் நடந்துள்ளார். மேலும் 66 நாட்களில் காசிக்கு பாதயாத்திரை சென்று வந்துள்ளார்.