வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை-முல்லைத்தீவு இடையில் கரையைக் கடந்ததாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புயலானது தற்போது, தமிழ்நாட்டின் பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
புரெவி புயல் கன்னியாகுமரியிலிருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டது. புயல் கரையைக் கடந்துவரும் நிலையில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது.
நாளை (டிச. 04) புரெவி புயல் பாம்பன் கரையை நோக்கி வருகிறது. இன்று பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல் பாம்பன் -கன்னியாகுமரி இடையே நள்ளிரவு அல்லது, டிசம்பர் 4ஆம் தேதி கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோருடன் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது அவர், தமிழ்நாடு, கேரள மாநில மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும், ஏற்கனவே இருமாநிலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தாகத் தகவல்கள் கூறுகின்றன.