ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த மார்ச் மாதத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நாகாலாந்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள 15 காவல் நிலையப் பகுதிகளிலும், மணிப்பூரின் 6 மாவட்டங்களில் உள்ள 15 காவல் நிலையப் பகுதிகளிலும், 23 மாவட்டங்களிலும் முழுமையாகவும், அஸ்ஸாமில் ஒரு பகுதியிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு நீக்கியது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையிலான 50 ஆண்டு கால எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தெரிவித்தார்.
வாரிசு அரசியல், சாதி வெறி, பிறரை திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவை பெரும் பாவங்கள், அவற்றால் பல ஆண்டுகளாக நாடு ஏராளமான துன்பங்களை அனுபவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது. காங்கிரஸுக்கு மோடி குறித்த பயம் உள்ளது. நாட்டின் நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாக இருக்கும். இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும். தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.