தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம்: குழுத் தலைவர்களுடன் ரகசியம் பேசிய அமித் ஷா! - மத்திய அரசு

டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

Amit Shah
Amit Shah

By

Published : Dec 9, 2020, 7:53 AM IST

Updated : Dec 9, 2020, 9:11 AM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நவம்பர் 26ஆம் தேதிமுதல் பஞ்சாப், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் 14 நாள்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் தொழிற்சங்கத் தலைவர்கள் சிலரை செவ்வாய்க்கிழமை சந்தித்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு தொடங்கிய இந்தக் கூட்டத்திற்கு 13 விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வரவழைக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. விவசாயிகள் சங்கத் தலைவர்களில் பஞ்சாபிலிருந்து எட்டு பேரும், நாடு தழுவிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேரும் இடம்பெற்றிந்ததாக கூறப்படுகிறது.

அகில இந்திய கிசான் சபாவின் ஹன்னன் மொல்லா, பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ.) ராகேஷ் டிக்கைட் ஆகியோர் அமித் ஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் உறுதியாக இருப்பதால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் 'ஆம்' அல்லது 'இல்லை' என்பதை மட்டும்தான் கேட்க இருக்கிறோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ருத்ரு சிங் மான்சா சிங்கூ தெரிவித்திருந்தார்.

விவசாயிகளுக்கும், அரசிற்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் டெல்லி முழுமையாக முடக்கப்பட்டு, அனைத்துச் சாலைகளும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 32 வயது விவசாயி மரணம்: முதற்கட்ட விசாரணையில் காவல்துறை

Last Updated : Dec 9, 2020, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details