மந்திராலயம்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்திராலயத்தின் புறநகர்ப் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ராமர் சிலைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டி உள்ளார். 108 அடி உயர ராமரின் பஞ்சலோக சிலையை நிறுவுவதன் மூலம் மந்திராலயம் உலக ஆன்மீக மற்றும் சுற்றுலா மையமாக உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மந்திராலயத்தில் நிறுவப்பட உள்ள 108 அடி உயர ராமர் சிலை, பல யுகங்களாக நமது சனாதன தர்மத்தின் செய்தியை உலகம் முழுவதற்கும் எடுத்துரைப்பதோடு, வைணவ மரபுகளை, நாடும், உலகமும் வலுப்படுத்தும் என்றும், இந்து கலாச்சாரத்தில் 108 என்பது மிகவும் புனிதமான எண் என்று அமித்ஷா, தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு உள்ள ட்வீட் பதிவில், ஆந்திர மாநிலம் கர்னூலில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தால் கட்டப்பட உள்ள 108 அடி உயர ராமரின் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தியாவிலேயே மிக உயரமானதாக இருக்கும் ராமரின் பிரம்மாண்டமான சிலை, நகரத்தை பக்தி உணர்ச்சியில் மூழ்கடிக்கும். அதே வேளையில், நமது செழுமையான மற்றும் காலமற்ற நாகரீக விழுமியங்களுக்கான உறுதிப்பாட்டில் மக்களை அசைக்காமல் இருக்க ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மந்த்ராலயம் கிராமத்தில், 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்கும் இந்த திட்டம் இரண்டரை ஆண்டுகளில் முடிக்கப்படும். மந்திராலயம் கிராமம் ராகவேந்திர சுவாமி கோவிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெரிய விஜயநகரப் பேரரசு, துங்கபத்ரா ஆற்றின் கரையில் தான் உருவானது. அது தெற்கிலிருந்து படையெடுப்பாளர்களை விரட்டியதன் மூலம் சுதேசத்தையும் ஸ்வதர்மாவையும் மீட்டெடுத்தது. மந்த்ராலயம் தாஸ் சாகித்ய பிரகல்பின் கீழ், வீடுகள், 'அன்னதானம்', 'பிரான் தானம்', 'வித்யா தானம்', குடிநீர் மற்றும் பசு பாதுகாப்பு போன்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
ஸ்ரீராகவேந்திரசுவாமி மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்துலு, 'ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை' நிறுவனர்கள் ராமு, ஸ்ரீதர், அமைச்சர் கும்மனூரு ஜெயராம், ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் டி.ஜி.வெங்கடேஷ் மற்றும் திரளான கிராம மக்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளையின் கீழ், இந்த சிலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலையை வடிவமைத்த சிற்பி ராம் வஞ்சி சுதாரிடம் ராமர் சிலையை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலையின் வடிவமைப்பை, சிற்பி ராம் வஞ்சி சுதார் இறுதி செய்து உள்ளார்..அதன் மாதிரியின் அடிப்படையில் சிறிய சிலை வைத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23ஆம் தேதி) அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளில் 108 அடி பஞ்சலோக சிலை செய்து, சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அந்த சிலைக்கு எதிரே ராமர் கோவில் கட்டப்பட உள்ளது.. மந்த்ராலயத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்படும். இந்த ராமர் கோவில் முழுக்க முழுக்க கல் கட்டிடமாக வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கோயிலின் புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவரான டாக்டர் ஏ வேலுவிடம்,இந்தக் கோயில் கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பிலான் இடத்தில் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயில், காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில், சிம்மாசலத்தில் உள்ள நரசிம்மஸ்வாமி கோயில், உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயில், கேரளா அனந்த பத்மநாபசுவாமி கோயில், பாசர ஞான சரஸ்வதி கோயில், கர்நாடகா செலுவ நாராயணசாமி கோயில், தமிழ்நாடு முஷ்ணம் வராஹஸ்வாமி கோயில் உள்ளிட்ட கோயில்கள், இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் ரீதியான ஆய்வு மேற்கொள்ளும் இந்திய தொல்லியல் துறை!