கங்காபூர் நகரம் (ராஜஸ்தான்):மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ரெட் டைரி’ சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர் அசோக் கெலாட் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு செய்த ஊழலுக்கான ஆதாரங்கள் 'ரெட் டைரி'-யில் (Red Diary) உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த ரெட் டைரியைக் கண்டு பயப்படுவதாகவும் ஆகவே, அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கங்காபூர் நகரில் இன்று (ஆக.26) நடந்த 'சஹார் கிசான் சம்மேளனம்' கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரெட் டைரியை கண்டு முதலமைச்சர் அசோக் கெலாட் ஏன் பயப்படுகிறார்? என்று கேள்வியெழுப்பினார். அதோடு, ரெட் டைரிக்குள் கோடிக்கணக்கான ஊழல்கள் தொடர்பான தகவல்கள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் அசோக் கெலாட்டின் "சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள்" பற்றிய விவரங்களின் சிலவற்றை பாஜகவினர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டு இருந்தனர். அது தவிர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அரசின் ஊழல் நடவடிக்கைகள் மற்றும் தவறுகள் உள்ளிட்டவை அடங்கிய 3 பக்க பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், இது போன்ற பல ரகசியங்களை வரும் நாட்களில் பிரதமர் வெளிப்படுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.