அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று (நவ.26) மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக பல பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓரே நாளில் 20 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் அளித்த தகவலின் படி, "மழையின் காரணமாக குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 20 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மட்டுமே நேற்று பெய்த மழையில் மின்னல் தாக்கி 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
தாஹோத் மாவட்டத்தில் நால்வரும், பருசில் மூவரும், தபி மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், அகமதாபாத், அம்ரேலி, பனஸ்கந்தா, பொடாட், கெடா, மெஹ்சானா, பஞ்சமஹால், சபர்கந்தா, சூரத், சுரேந்திரநகர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் ஒருவர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அவசரநிலை செயல்பாட்டு மையத்தின் அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது X தளத்தில், "குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசமான வானிலை மற்றும் மின்னல் தாக்கியதன் காரணமாக பலர் இறந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன்” என தெரிவித்தார்.