டெல்லி:தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாகக் கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன.
அதே போன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாகத் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 37,907.19 கோடி ஏற்கெனவே கோரியுள்ளது.
இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூபாய் 19,692.67 கோடியும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூபாய் 18,214.52 கோடியும் உள்ளடக்கியதாகும்.
இதனையடுத்து நிவாரண தொகையை விரைந்து வழங்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தார், ஆனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கத் தமிழக எம்.பிக்கள் குழு முடிவு செய்தது.
அதன்படி டெல்லியில் இன்று தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர். இதில் தி.மு.க-வின் டிஆர் பாலு , காங்கிரஸ் கட்சி ஜெயக்குமார், ம.தி.மு.கவின் வைகோ, முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி , மார்க்சிஸ்ட் கட்சியின் நடராஜன் , வி.சி.க கட்சியின் ரவிக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் சந்தித்தனர்.
இது குறித்து திமுக எம்பி டிஆர் பாலு கூறியதாவது, "தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம். மத்தியக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தர்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்? என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்..!