மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, டிசம்பர் 26ஆம் தேதிமுதல் அஸ்ஸாம், மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்வதாக அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அமித் ஷா கவுகாத்தி விமான நிலையம் வந்தடைந்தார்.
அஸ்ஸாமில் அமித் ஷா
கவுகாத்தி விமான நிலையத்திற்கு வந்த அமித் ஷாவை அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விமான நிலையத்தின் உள்புறம் பரத நாட்டியம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க, பாரம்பரிய வாத்தியங்களை இசைக் கலைஞர்கள் இசைக்க அமைச்சருக்குப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமித் ஷா ட்வீட்
'கவுகாத்தி வந்த எனக்கு இதுபோன்ற அன்பான வரவேற்பை அஸ்ஸாம் மக்கள் கொடுத்தற்கு முழு மனத்துடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அஸ்ஸாம் முதலமைச்சர் ட்வீட்
'அஸ்ஸாம் வந்த அமைச்சர் அமித் ஷாவை நான் மனதார வரவேற்றேன். அஸ்ஸாம் மக்கள் சார்பாக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைக்கவுள்ளார்' என சர்பானந்தா சோனோவால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமித் ஷாவின் 2 நாள் பிளான்
அமித் ஷாவின் இந்த இரண்டு நாள் பயணத்தின்போது, கவுகாத்தியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் அஸ்ஸாம் முழுவதும் அமைக்கப்படவுள்ள ஒன்பது சட்டக் கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மாநிலத்தில் உள்ள நம்கார் எனப்படும் 8,000 வைணவ மடங்களுக்கு அஸ்ஸாம் தரிசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி மானியங்களை வழங்குவார்.
டிசம்பர் 27ஆம் தேதி மணிப்பூரில், முவோங்கொங்கில் ஐஐடி, மாநில அரசு விருந்தினர் மாளிகை, மாநிலக் காவல் தலைமையகம் மற்றும் இம்பாலில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.