துரக்பூர் (ராஜஸ்தான்):ராஜஸ்தான் மாநிலம் துர்காபூரில் வைத்து, பரிவர்தான் யாத்திரையை (Parivartan Sanklap Yatra) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (செப்.3) தொடங்கி வைத்தார். இதனையடுத்து நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “கடந்த இரு நாட்களாக INDIA கூட்டணியினர் சனாதன தர்மத்தை அவமதித்து வருகின்றனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சனாதன தர்மம் குறித்து பேசி வருவது வாக்கு வங்கிக்காக மட்டுமே. இவ்வாறு அவர்கள் (எதிர்கட்சிகள்) சனாதன தர்மத்தை எதிர்ப்பது முதல் முறை அல்ல. முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பட்ஜெட்டில் முதல் உரிமை சிறுபான்மையினருக்கு என கூறினார்.
ஆனால், முதல் உரிமை என்பது ஏழை, பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு என நாங்கள் கூறுகிறோம். தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறுகின்றனர். அவர்கள் சனாதன தர்மத்தை அவமதித்து உள்ளனர்.
நரேந்திர மோடி வெற்றி பெற்றால், சனாதன தர்மம் ஆட்சி செய்யும் என இன்று காங்கிரஸ் கூறுகிறது. அதிலும், லக்ஷர்-இ-தொய்பா அமைப்பை விட, இந்து அமைப்புகள் மிகவும் ஆபத்தானது என ராகுல் காந்தி கூறி உள்ளார். ராகுல் காந்தி, லக்ஷர்-இ-தொய்பா அமைப்புடன் இந்து அமைப்புகளை ஒப்பிடுகிறார்.