45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
நாட்டில் கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முதலில் மருத்துவத் துறையினருக்கும், முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர், மார்ச் 1ஆம் தேதிமுதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இன்றுமுதல் (ஏப்ரல் 1) மூன்றாம் கட்ட தடுப்பூசி விநியோகிக்கும் திட்டம் தொடங்கியுள்ளது. அதன்படி, 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருவதால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கட்டாயம் தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் http://cowin.gov.inஎன்ற இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்துகொள்ளலாம் அல்லது பிற்பகல் 3 மணிக்குப் பிறகு அருகிலுள்ள தடுப்பூசி விநியோகிக்கும் மையத்திற்கு நேரடியாகச் சென்றும் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:’இது அரசா, சர்க்கஸா...’ - வட்டிவிகித அறிவிப்பு வாபஸ் குறித்து ரந்தீப் சிங் சுர்ஜிவாலா