கரோனா பரவல் மீண்டும் தீவிரமாகிவரும் நிலையில், இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக அச்சம் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், குஜராத்தின் பல்வேறு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஜுனாகாட், காந்தி நகர், ஜம் நகர், பவ் நகர், ஆனந்த், நதியாட் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலை... குஜராத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு!
காந்தி நகர்: கரோனா பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில், குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் குறித்து உயர் மட்ட அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதைத் தொடர்ந்து பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, "திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 30ஆம் தேதி வரை பெரிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் மூடப்படுகிறது" என்றார்.
முன்னதாக, கரோனா கட்டுப்பாடுகள் குறித்த முடிவை மாநில அரசே எடுக்கலாம் என குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஏப்ரல் 6ஆம் தேதி, புதிதாக 3 ஆயிரத்து 280 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மொத்த எண்ணிக்கை 3,02,932ஆக உயர்ந்துள்ளது.