கர்நாடக மாநிலம் பெங்களூருவில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்றாயிரம் கரோனா நோயாளிகள் காணவில்லை என்று வருவாய்த் துறை அமைச்சரும், மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவருமான ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், காணாமல்போன கரோனா நோயாளிகளை உடனடியாகக் கண்டறிய காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர். அசோகா கூறுகையில், "இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் கரோனா நோயாளிகள் காணவில்லை. அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் அனைவரது செல்போன்களும் அணைக்கப்பட்டுள்ளன.
இதனால், எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இவர்களால் பெங்களூரு கரோனா தொற்றுப் பரவும் நகரமாக மாறியுள்ளது. எனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது செல்போனை அணைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒராண்டு காலமாக கரோனா தொற்றை நான் கையாண்ட அனுபவத்தில், சுகாதாரத் துறையினர் செல்போன் அழைப்புக்கு 20 விழுக்காடு கரோனா நோயாளிகள் பதிலளிப்பதில்லை.
இதனால், காவல் துறையினர் கரோனா நோயாளிகளைக் கண்காணித்துவருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானோர் கரோனா தொற்றுடன் குடிபெயர்ந்து வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடுகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க:கரோனா இல்லைனு சான்றிதழா... இல்ல முகவர்கள் பட்டியலா - கேள்வியெழுப்பும் மம்தா