இந்தூர் : மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் ஏழு முதல் எட்டு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மகாராஜா துகோஜிராவ் ஹோல்கர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த 18 குழந்தைகள் 7 முதல் 8 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த கலப்பட பால் தான் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் மறுத்து உள்ளது. இது குறித்து மருத்துவர் சுனில் ஆர்யா, மருத்துவமனையில் 18 குழந்தைகள் இறந்ததாக பரவி வரும் தகவல் முற்றிலும் பொய் என்று தெரிவித்தார். மாறாக இரண்டு குழந்தைகள் மட்டுமே உயிரிழந்ததக அவர் தெரிவித்து உள்ளார்.
அதிலும், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு செப்சிஸ் பாதிப்பு இருந்ததாக மருத்துவர் தெரிவித்தார். செப்சிஸ் என்பது மிகவும் தீவிரத்தன்மை வாயந்த நோய்த் தொற்று என்று கூறப்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலை என்றும் இந்த தொற்று பெரும்பாலும் நுரையீரல், சிறுநீர் பாதை, தோல் அல்லது இரைப்பை குழாயின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.