கவுகாத்தி :2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 142 மக்களவை தொகுதிகளை முழுமையாக கைப்பற்றுவது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடைபெற்றது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மத்திய அமைச்சர் சர்பானந்த சோன்வால், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, திரிபுரா முதலமைச்சர் மணிக் ஷா, மற்றும் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், முத்த தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள 142 மக்களவை தொகுதிகளை முற்றிலும் கைப்பற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் யுக்திகள் மற்றும் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து பேசிய அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிடா, "தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வருவதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு என்றும் அதை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் அனைத்து கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கட்சித் தலைமையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.