தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் வழியில் கேரளம்.. போர்க்கொடி தூக்கும் மூத்தத் தலைவர்கள்... ராகுல் காந்தி அதிரடி! - சுதாகரன்

பஞ்சாப் போன்று கேரள காங்கிரஸூம் உள்கட்சி பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மலையாள தேசத்துக்கு புதன்கிழமை (செப்.29) சென்றார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Sep 29, 2021, 12:53 PM IST

Updated : Sep 29, 2021, 3:15 PM IST

கோழிக்கோடு : கேரள காங்கிரஸில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு இடையே ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது ராகுல் காந்தி கட்சியின் மாநிலத் தலைவர் சுதாகரனை சந்தித்து பேசுகிறார்.

எனினும் கட்சியில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை சந்தித்து பேசுவது தொடர்பான எவ்வித திட்டமும் வெளியாகவில்லை. இருப்பினும், சுதாகரன், வி.டி. சுதீசன் ஆகிய இருவருடன் ராகுல் காந்தி ஆலோசிப்பார்.

மூத்தத் தலைவர்கள் அதிருப்தி

கேரள காங்கிரஸை பொறுத்தவரை அம்மாநிலத்தின் மூத்தத் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவர்களுக்கும் சுதாகரன், சுதீசன் இடையே பனிப்போர் நடைபெற்றுவருகிறது.

முன்னதாக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் இருவர் கட்சியிலிருந்து விலகி ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

திடீர் ராஜினாமா

இந்நிலையில், கட்சியின் மற்றொரு மூத்தத் தலைவரான வி.எம். சுதீரன் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

கேரளத்தில் திட்டம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி, சில வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து அங்கிருந்து வியாழக்கிழமை (செப்.30) இரவு டெல்லி திரும்புகிறார்.

சித்து விலகல், அமரீந்தர் தாக்கு

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உள்கட்சி பிரச்சினையில் தள்ளாடிவருகிறது. அங்கு மாநில தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் தனது பதவியை நேற்று (செப்.28) ராஜினாமா செய்தார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், “அவர் ஒரு நிலையான மனிதர் இல்லை என்று நான் ஏற்கனவே கூறினேன், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தை அவரால் நிர்வகிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

கேப்டன் அமரீந்தர் சிங், சித்து

அமரீந்தர் சிங் ராஜினாமாவுக்கு பிறகு முதலமைச்சர் பதவி நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

புதிய முதலமைச்சருடன் சித்து

இதையும் படிங்க : டெல்லியில் கேப்டன்.. கலகலக்கும் காங்கிரஸ்.. அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?

Last Updated : Sep 29, 2021, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details