வாஷிங்டன்: அமெரிக்க விவசாயத்துறை செயலர் டாம் வில்சாக் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்காவின் வான்கோழி, வாத்து, கிரேன்பெரிஸ் மற்றும் பளுபேரிஸ் மீதான வரியை குறைக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது. மேலும், அமெரிக்காவின் விவசாய உற்பத்தியாளர்களுக்கான புதிய சந்தையாக இவை அமையும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டாம் வில்சாக் அறிக்கையில், கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா ஆகிய இரு நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் கீழ் கடைசி நிலுவை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், இதன் மூலம் அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதில், பதப்படுத்தப்பட்ட வான்கோழி மற்றும் வாத்துகள், கிரேன்பெரிஸ் மற்றும் பளுபேரிஸ், உறைந்த, உலர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கிரேன்பெரிஸ் மற்றும் ப்ளுபேரிஸ் ஆகிய பொருட்கள் அடங்கும்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற G20 மாநாட்டிற்கு முன்னதாக செப்டம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சந்திப்பின் போது சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, அமெரிக்கா - இந்தியா இடையே ஆன உலக வர்த்தக அமைப்பின் 7வது மற்றும் கடைசி நிலுவையிலிருந்த கோப்புகளும் தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.