நியூயார்க்: கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது முதலே பெரும் பொருளாதார பேரிழப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. நிதி நிலையை சுட்டிக் காட்டி டிவிட்டர் தொடங்கி பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் பணி நீக்கத்தை கையில் எடுத்து உள்ளன. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கியது முதல், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி பணி நீக்க கலாச்சாரத்தை பெரியளவில் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்கள் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பணியாளர் நீக்கத்தை கையில் எடுத்தன. இந்த முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனம் வரும் வாரத்தில் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளது.
ஆண்டு தொடக்கத்தில் நடப்பாண்டுக்குள் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போதைய 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பை கடிதம் மூலம் ஊழியர்களுக்கு அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாசி தெரியப்படுத்தினார்.
வரும் வாரத்தில் இந்த 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இணைய சேவைகள், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தொழில்நுட்பம், விளம்பரம் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து மதிப்பீட்டு அடிப்படையில் இந்த பணியாளர் நீக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.