புதுடெல்லி: அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்த நபர், வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தவர் ஹர்பிரீத் கில் (36). இவர் நேற்று (ஆகஸ்ட் 29) இரவு தனது நண்பர் கோவிந்த் சிங் (32) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது இரவு 11.30 மணியளவில் வடக்கு டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 5 அடையாளம் தெரியாத இளைஞர்கள், இவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் புல்லட் ஹர்பிரீத் கில்-இன் தலையின் வலதுபுறம் காதுக்கு பின்னால் நுழைந்து மறுபக்கத்தில் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நண்பரும் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
தலையில் சுடப்பட்ட கில், ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது நண்பர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து துணை காவல் ஆணையர் (வடகிழக்கு) ஜாய் டிர்கி கூறுகையில், “பஜன்புராவில் வசிக்கும் சிங் என்பவர், அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், அவரும் தலையில் சுடப்பட்ட நிலையில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.