நுன்வான் (ஜம்மு காஷ்மீர்):தெற்கு காஷ்மீர், அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் யாத்திரை நடைபெறாத நிலையில் இந்தாண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.
அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து முதல் குழு 2 ஆயிரத்து 750 பக்தர்களுடன் அமர்நாத் குகை கோயிலுக்கு புனித யாத்திரையை இன்று (ஜூன் 30)தொடங்கியது. இந்த யாத்திரையை துணை ஆணையர் பியூஷ் சிங்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
யாத்திரை குறித்து சிங்லா கூறுகையில், "43 நாட்கள் நடைபெறும் யாத்திரை சுமூகமாக நடைபெற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் புனித தலத்தில் தரிசனம் செய்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
மூன்று அடுக்கு பாதுகாப்பு: பெரும்பாலானோர் நடைபயணமாகவே புனித தலத்திற்கு செல்வர். ஷீஷ்நாக் மற்றும் பஞ்சதர்னி என்ற இடங்களில் தங்கி மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்வர். முன்னதாக, நேற்று (ஜூன் 29) ஜம்மு முகாமிலிருந்து குகை கோயிலுக்கு 4 ஆயிரத்து 890 பக்தர்கள் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யாத்திரை நடத்தப்படுவதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.