புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி கூட்டாக செய்தியர்களை சந்தித்தனர்.
அப்போது ஊடகங்களிடையே புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (பிப்.27) முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். விருப்ப மனுவை தாக்கல் செய்ய இறுதி நாளாக மார்ச் 5ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொது பிரிவினருக்கு ரூ. 5 ஆயிரமும், பெண்கள் - பட்டியலின பழங்குடியின மக்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 ரூபாயும் விருப்ப மனு கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் பரப்புரைக்கு நாரயணசாமி கடும் கண்டனம்! தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலைக்குதான் பிரதமர் மோடி இப்போது அடிக்கல் நாட்டி உள்ளார். 6 ஆண்டு காலம் கழித்து இப்போது தான் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமே 98% செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தை காரைக்காலில் செயல்படுத்துவது போன்ற மாயையை ஏற்படுத்தி காரைக்கால் மக்களை பிரதமர் மோடி ஏமாற்றியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளை மத்திய அரசின் ஆதரவோடு முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று மோடிக்கு தெரியாதா?
மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க வந்திருந்தார். கள ஆய்வின்போது அவரது காலணி சேற்றில் சிக்கியது. அப்போது, அவருக்கு உதவும் வகையில், நான் அவரது காலணியை எடுத்துக் கொடுத்தேன். ஆனால், காலணியை நான் தான் அவரது காலில் மாட்டிவிட்டதாக பிரதமர் மோடி பொய் பரப்புரை செய்துவருகிறார். நாட்டின் பிரதமர் எதை சொன்னாலும் அது குறித்து விசாரித்து, முழு உண்மையை அறிந்து பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க :சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு - நக்சலைட் உயிரிழப்பு!