பிரயாக்ராஜ் :ஞானவாபி மசூதி வழக்கில், தொழுகை கூட வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த ஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. இந்த மசூதியை அஞ்சுமன் இன்டெஜாமியா குழு நிர்வகித்து வருகிறது. இந்த மசூதியின் வளாகத்தில் சிரிங்கர் கவுரி சன்னதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவுரி சன்னதிக்கு தினமும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி, 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆய்வு முடிவில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற பொருள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட நீரூற்று என்றும் சிவலிங்கம் இல்லை என்றும் முறையிட்டது. இதையடுத்து மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனிடையே எதிர் மனுதாரர்கள் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.