சென்னை: ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம், "2018 - Everyone is a Hero". இந்தப் படம் கேரளாவில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு பேரிடரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மக்கள், பேரிடரின்போது எவ்வாறு அவற்றை சமாளித்து, அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பது குறித்த கதையாகும்.
ஆஸ்கரில் நுழைந்தது எப்படி? ஆஸ்கர் விருது என்பது உலகில் சிறந்த திரைப்படங்களைச் சேகரித்து கவுரவிக்கப்படும் ஒரு விருது ஆகும். அதற்காக இந்தியா சார்பில் கிரிஷ் கசரவல்லி தலைமையில் 16 பேர் கொண்ட குழு, ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு அனுப்புவதற்கான படத்தை தேர்வு செய்ய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி போன்ற மொழிகளில் வெளியான 22 சிறந்த திரைப்படங்கள் அனுப்பப்பட்டன.
அப்படி அனுப்பப்பட்டதில் மலையாளத்தில் வெளியான '2018 Everyone is a Hero' என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வாகி உள்ளது. இந்த தகவலை இந்திய திரைப்பட கூட்டமைப்புத் தலைவர் ரவி கொட்டாரக்கரா நேற்று (செப்.27) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
பாக்ஸ் ஆபிஸ் வெற்றி:டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான '2018' திரைப்படம், வெளியாகிய 10 நாளில் சுமார் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும், இதுவரை அதிக வசூல் செய்த முதல் மூன்று மலையாளப் படங்களில் ஒன்றாகவும் இணைந்து சாதனை படைத்தது '2018' திரைப்படம். மேலும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி அதிக வசூலை ஈட்டிய இத்திரைப்படம், ஒடிடி தளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களைக் கடந்தது எனலாம்.
படத்தின் பின்னணி குழு: 2018 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் மட்டுமின்றி, பல்வேறு பின்னணி குழுவில் வேணு குன்னப்பிள்ளி, சி.கே.பத்மகுமார் மற்றும் ஆன்டோ ஜோசப் ஆகியோரும் உழைத்துள்ளனர். மேலும் படக்குழுவில் டோவினோ தாமஸ், குஞ்சாகோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், இந்திரன், சுதீஷ், கிலு ஜோசப், வினிதா கோஷி, அஜு வர்கீஸ், தன்வி ராம், கௌதமி நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.