ஹைதராபாத்: கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்தும் பெருமளவுக்கு விவாதிக்கப்படுகிறது. ஆனால், இன்றளவும் மருத்துவக் காப்பீடுகளை சரியாக எந்தவித சிக்கலும் இன்றி எப்படி பயன்படுத்துவது? எப்படி க்ளைம் செய்வது? என்பதில் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் இருந்து வருகின்றன. இதுகுறித்த சில பயனுள்ள தகவல்களைப் பார்க்கலாம்...
ஏராளமானோர் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீடுகளை எடுக்கின்றனர். தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ஒரு காப்பீட்டை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், மருத்துவ அவசர காலங்களில் எந்த காப்பீட்டை முதலில் பயன்படுத்துவது? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவக் காப்பீடுகளை க்ளைம் செய்வது சட்டப்படி குற்றம். அதனால், ஒரே நேரத்தில் இரு காப்பீடுகளை க்ளைம் செய்யக்கூடாது. முதலில் ஒரு பாலிசியை க்ளைம் செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான தொகை, அந்த காப்பீட்டுத் தொகையை மீறி சென்றால், இரண்டாவது பாலிசியைப் பயன்படுத்த வேண்டும்.
சான்றாக, உங்கள் அலுவலகத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்கிய நிலையில், நீங்கள் தனிப்பட்ட முறையில் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளதாக கருத்தில் கொள்வோம். இந்த சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு 8 லட்சம் ரூபாய் தேவைப்பட்டால், முதலில் அலுவலகத்தில் வழங்கப்பட்ட காப்பீட்டை க்ளைம் செய்துவிட்டு, பிறகு உங்களது தனிப்பட்ட காப்பீட்டை க்ளைம் செய்யலாம்.
எப்படி க்ளைம் செய்வது?மருத்துவமனைகளில் ஒரு மருத்துவக் காப்பீட்டை மட்டுமே க்ளைம் செய்ய அனுமதி உள்ளது. மீதமுள்ள தொகையை சிறிது காலத்திற்குப் பிறகு இரண்டாவது காப்பீட்டின் மூலம் க்ளைம் செய்யலாம். உங்களது மருத்துவ செலவு முதல் காப்பீட்டுத் தொகையை மீறிச் செல்லும்போதுதான் சிக்கல்.