டெல்லி: இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ‘X' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “இம்மாதம் 18ஆம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடர்பாக, வருகிற 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மற்றும் அழைப்பாணை அனைத்துக் கட்சி தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து கடிதமும் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட ‘X' பதிவில், “17வது மக்களவையின் 13வது கூட்டத்தொடரும், மாநிலங்களவையின் 261வது கூட்டத்தொடருமான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. அமித் அம்ரித் கால் என்பதை நோக்கிய பல பயன் உள்ள ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் அக்கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட உள்ளது” என தெரிவித்து இருந்தார்.
மேலும், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் ‘இந்தியா’ (India) என்ற பெயரை ‘பாரத்’ (Bharat) என மாற்றம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஈடிவி பாரத் செய்திகளுக்கு தகவல் அளித்து இருந்தன.