அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் நாடாளுமன்ற மைய வளாகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைகளின் கண்ணியத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
உரையில் அவர் கூறியதாவது: "நமது நாடாளுமன்றம் நாட்டின் ஜனநாயக அமைப்பின் உச்சத்தில் உள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இங்கு கூடி சட்டங்களை இயற்றுவதுடன் பொது நலன் தொடர்பான பிரச்சனைகளையும் விவாதிக்கின்றனர்.
உண்மையில், கிராம சபை, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு ஒரே முன்னுரிமை இருக்க வேண்டும். அந்த முன்னுரிமையானது, அவர்களின் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் பணியாற்றுவதில் உள்ளது.
மக்கள் நலனே பிரதானம்
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையின் உண்மையான நோக்கத்திற்கு இடையூறாக அந்த வேறுபாடுகள் இருக்கக்கூடாது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவது இயல்பானது. ஆனால் இந்தப் போட்டி சிறந்த பிரதிநிதிகளாக, பொது நலனுக்காக சிறந்த செயல்களை செய்வதாகற்காக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான போட்டியாக கருதப்படும்.