நியூயார்க்:அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு சென்றார். பின்னர் நியூயார்க் நகருக்கு சென்ற அவர் அங்குள்ள மன்ஹாட்டான் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இந்திய வம்சாவளியினர், காங்கிரஸ் நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. நாங்கள் பாஜகவை தோற்கடிக்கவில்லை, அவர்களை அழித்துவிட்டோம். கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜகவை தூக்கி எறிந்தோம். கர்நாடகா தேர்தலை பொறுத்தவரை அனைத்துமே தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என பாஜக எண்ணியது. அதன்படி அனைத்து ஊடகங்கள், 10 மடங்கு பணம், அரசுத்துறைகள் ஆகியவை அவர்கள் பக்கம் இருந்தன. எல்லாமே அவர்களிடம் இருந்த பிறகும், நாங்கள் அவர்களை அழித்தோம்.
அடுத்து தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் பாஜகவை அழிக்க உள்ளோம். அதற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இந்த தேர்தலுக்கு பிறகு தெலங்கானாவில் பாஜகவை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பாஜகவை தோற்கடிக்கும் பணியை காங்கிரஸ் மட்டும் செய்யவில்லை. மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில மக்கள் என ஒட்டுமொத்த நாடும் பாஜகவை தோற்கடிக்க போகிறது.