டெல்லி: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அல்கா மிட்டலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து ஜன.3 அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த ட்விட்டர் பதிவில், "ஓஎன்ஜிசியின் மனிதவள இயக்குநர் டாக்டர். அல்கா மிட்டலுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு, ஓஎன்ஜிசிக்கு தலைமை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கூடுதல் பொறுப்பு
நாட்டின் மிகுந்த மதிப்பு வாய்ந்த, சந்தை மூலதனத்தைக் கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகவும் ஓஎன்ஜிசி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை சுபாஷ் குமார் கடந்தாண்டு (2021) ஏப்ரல் மாதம் முதல் கூடுதலாக கவனித்து வந்தார்.
அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) பணி ஓய்வுபெற்ற பின்னரும், அவருக்கு பதிலாக அப்பொறுப்பிற்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாக குழுவின் மூத்த இயக்குநரான அல்கா மிட்டல், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பை கூடுதலாக ஏற்க உள்ளார். முன்னதாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இயக்குநராக (நிதி) அனுராக் சர்மா கடந்த ஜனவரி 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
முழுநேர தலைவர் இல்லை
ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் தலைவரோ அல்லது நிர்வாக இயக்குநரோ ஓய்வு பெறும்பட்சத்தில் அவருக்கு அடுத்து அப்பொறுப்பிற்கு வரக்கூடியவர்களை இரண்டு மாதங்களுக்கு முன்னரே அரசு அறிவிக்கும்.
இதுவே நடைமுறையாக இருந்து வந்துள்ளது. ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனத்தை பொறுத்தவரை இந்த நடைமுறை பின்பற்றபடவில்லை. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முழுநேர தலைவராக இருந்த சாஷி சங்கர் கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதியோடு ஓய்வுபெற்றார்.
ஆனால், அவருக்கு பதிலாக யாரும் நியமிக்கப்படாமல், நிர்வாகக் குழுவின் மூத்த இயக்குநராக இருந்த சுபாஷ் குமாருக்கு தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா பாதிப்பு!