அலிகார் :அலிகார் மாநிலத்தில் தாந்திரீக சடங்குகளின்படி, தனது 3 வயது குழந்தையை நரபலி கொடுத்துவிட்டதாக தனது மைத்துனர் மீது குழந்தையின் தந்தை காந்தி பார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் நேற்று முன்தினம் (மே 22) குழந்தையின் சடலத்தை கல்லறையில் இருந்து மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
டோரி நகர் பகுதியைச் சேர்ந்த ஹிராலால். இவர் தனது 3 வயது குழந்தையை, மத்ராக் காவல் நிலைய எல்லைப்பகுதியில் உள்ள முகந்த்பூர் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் சில காலமாக வசித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், கடந்த மே 19 ஆம் தேதி தனது குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்ததாக தனக்கு கிடைத்ததத் தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, குழந்தை ரித்தேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, தனது 'குழந்தை ரித்தேஷ் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழக்கவில்லை என்றும் தனது குழந்தையை மாந்திரீகம் செய்து தனது மைத்துனர் நரபலி செய்து விட்டதாகவும்' அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ஹிராலாலின் சகோதரியின் குடும்பத்தில் நான்கு மகள்கள் இருக்கும் நிலையில், இரண்டு மகன்கள் எதிர்பாராத விதமாக சமீபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனக்கு மீண்டும் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு தனது மைத்துனர் ராஜோ இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து குழந்தையின் தந்தை ஹிராலால் கூறுகையில், 'சந்தேகத்திற்கு இடமில்லாமல், எனது குழந்தை என் சகோதரியின் வீட்டில் தான் இருந்தது. மேலும், எனது குழந்தை தாந்திரீகம்-மாந்திரீகம் செய்து நரபலி செய்து கொலை செய்யப்பட்டது என்பதில் நான் உறுதியாக உள்ளதாகவும், ஆகவே, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்' என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.