டெல்லி:தலைநகர் டெல்லியில், கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஜி 20 அமைப்பில், ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பு நாடாக இணைந்து உள்ளதாக, பிரதமர் மோடி, அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர், ஜி20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவைகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்தியா - மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே, கப்பல் மற்றும் ரயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான ஒப்பந்தம் குறித்து இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக, இந்தியாவிற்கு, சவுதி அரேபிய இளவரசரும், அந்நாட்டின் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஜீஜ் அல் சவுத், வருகை தந்து இருந்தார். ஜி 20 மாநாடு முடிவுற்ற நிலையில், இந்தியா - சவுதி அரேபிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து பேச உள்ளனர்.
இதற்காக, ராஷ்டிரபதி பவன் வந்த சவுதி அரேபிய பிரதமரும், இளவரசருமான அல் சவுத்திற்கு பரம்பரிய முறையிலான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர். இந்தியா - சவுதி அரேபியா நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டில் ரியாத் நகரில் கையெழுத்தாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.