கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று(நவ.4) அல்கொய்தா பயங்கரவாதி ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர், முகமது ஹஸ்னத் என்றும், அவர் கொல்கத்தாவின் வடக்கு எல்லையில் உள்ள பிடி சாலை அருகே கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அதனடிப்படையில் மால்டா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மடிக்கணினிகள், பென்டிரைவ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய கொல்கத்தா காவல் துறையின் இணை கண்காணிப்பாளர் சாலமன் நிஷாகுமார், "பயங்கரவாதியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் பல குறியீட்டு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்குவங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நாசவேலைகளை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் உள்ள 12 விவிஐபிக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டமிட்டது தெரிகிறது. பயங்கரவாதிகள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய பின்னர் வங்கதேசத்திற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: போலீஸ் காவலில் மளிகை கடைக்காரர் உயிரிழப்பு