லக்னோ (உத்தரப்பிரதேசம்): லக்னோவில் சுதந்திரப் போராட்ட வீரரும், சோசலிஸ்ட் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நினைவாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையம் (JPNIC-Jayaprakash Narayan International Centre) கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அகிலேஷ் யாதவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நிறுவப்பட்டுள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலைக்கு, அவரது பிறந்தநாளில் சமாஜ்வாதி சார்பில் ஆண்டுதோறும் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாள் நேற்று (அக் 11) கொண்டாடப்பட்டது.
இதனை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஜெபிஎன்ஐசி மையத்தில் இருக்கக் கூடிய ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலைக்கு சமாஜ்வாதி சார்பில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவிக்கச் சென்றனர். அப்போது, ஜெபிஎன்ஐசி மையத்தில் பராமரிப்பு பணி நடப்பதாகக் கூறி, அகிலேஷ் யாதவ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.