எட்டாவா (உத்தரப் பிரதேசம்) : 2022ஆம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உ.பியில் 312 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது.
யோகியின் ஆட்சி நான்கு வருடங்களில் முடிவடையும் சூழலில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவை இந்தத் தேர்தலில் தோற்க்கடிக்க தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும் ஒருங்கிணைந்து திட்டம் வகுத்துவருகின்றன.
இச்சூழலில், பிகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைத்தது பயனில்லாமல் போனது. நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோடி ஆதிக்கத்தை வீழ்த்த அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் கைக்கோர்த்தார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது.
இவ்வேளையில், 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தங்களுடைய முக்கியத் திட்டமே, எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்பதுதான் என சமாஜ்வாடி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.