மும்பை : மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், 30 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சிவசேனா - பாஜக கூட்டணியில் இணைந்து உள்ளார். இந்நிலையில், அஜித் பவாருக்கு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு இதே போல் பாஜகவுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், அஜித் பவாரின் முடிவுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இசைவு கொடுக்காத நிலையில், 100 மணி நேரம் கூட அஜித் பவாரால் துணை முதலமைச்சராக பதவி வகிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது . மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 இடங்களில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 தொகுதிகலும் வெற்றி பெற்றது.
அடுத்த முதலமைச்சர் யார், அமைச்சர் பதவி பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக பாஜக - சிவசேனா இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, ஆட்சியைக் கைப்பற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தையில் சிவசேனா ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், பாஜகவை ஆதரிப்பது என்பது அஜித் பவாரின் தனிப்பட்ட கருத்து என்றும்; அதற்கு ஒரு போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்றும் சரத் பவார் தெரிவித்தார்.
மேலும், புதிய அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் - அஜித் பவார் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி மராட்டியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.