மும்பை :கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கமே இருப்பதால், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்தனர். இதையடுத்து மகாரஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி தட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணையும் முடிவுக்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும், கட்சியின் முழுக் கட்டுப்பாடும் தங்களிடமே உள்ளதால், தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரிலேயே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூறினார்.
கட்சித் தாவல் என பலர் விமர்சித்தாலும் அதற்கு மதிப்பு கொடுக்க மாட்டோம் என்றும் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றார். அதனால் தான் ஏக்நாத் ஷிண்டே தலமையிலான அரசில் இணையும் முடிவை எடுத்து உள்ளதாக கூறினார். இந்த முடிவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.